Wednesday, November 16, 2011

இந்தியாவிற்கு கொள்ளையடிக்க வந்தவன்தான் வாஸ்கோடகாமா! - சந்தோஷ் சிவன்


'வாஸ்கோடகாமா'வின் வருகையைப் பற்றிய படம் என்று செய்திகள் கூறப்படுகின்றன. அப்படியானால் இது வரலாற்றுப் படமா?

நிச்சயமாக இல்லை. ஒரு ஹிஸ்டாரிக்கல் ஃபேன்டஸி ஃபிலிம் என்று வைத்துக் கொள்ளலாம். இந்தப் படத்தில் நிறைய அட்வெஞ்சர் இருக்கு. த்ரில்லர் சமாச்சாரங்கள் நிறைய இருக்கு. நீங்கள் கேட்பதை போல ஒரு சின்ன பெட்டிக்குள் அடக்கிவிடுகின்ற கதையல்ல இது. வாஸ்கோடகாமாவின் வருகையைப் பற்றியும் அவரின் காலனிய அடக்குமுறை பற்றியும் படத்தில் பேசி இருக்கிறோம். அது ஒரு பார்ட். படம் முழுக்கவே அப்படியில்லை.

சமகால படம் என்று சொல்கிறீர்கள்? அப்புறம் இதில் 'வாஸ்கோடகாமா' வருகிறார் என்கிறீர்கள். அவரின் காலகட்டம் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இல்லையா?

ஆமாம். முதலில் வாஸ்கோடகாமா வந்துதான் நம்நாட்டைக் கண்டுபிடித்ததாக ஒரு கதையை நமக்கு பள்ளிக்கூட வரலாற்றில் சொல்லிக் கொடுத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். உண்மை அப்படி இல்லை. வாஸ்கோடகாமா வருவதற்கு முன்னாலேயே நம்முடைய தாத்தன் பாட்டன் எல்லாம் இங்கேதான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வாஸ்கோடகாமா நம்மை வந்து பார்த்தார். அதனால் அவர்தான் நம்மைக் கண்டுபிடித்தார் என்பதில் என்ன உண்மையிருக்கிறது.

'குரு மிளகு' தேவைக்காக முதலில் மூன்று கப்பல்களில் 'காலிகட்' பகுதிக்குள் வந்து காலை வைத்தான் காமா. அதற்கு முன்னால் போர்ச்சுக்கீசியர்கள் வந்துவிட்டார்கள். மொகலாயர்கள் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்குள் வியாபாரச் சண்டை வருகிறது. நம்மவர்கள் சண்டைகளில் ஒரு ரூல்ஸைக் கடைப்பிடிப்பார்கள். அந்த விதியை மீறாமல் சண்டையிடுவது இந்தியர்களின் வழக்கம். ஆனால் காலனிய ஆட்சியர்கள் கரடுமுரடாக சண்டை போட்டதால் நம்மவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் தோல்வி கண்டார்கள்.

முதலில் 3 கப்பல்களில் வந்த காமா பின்னர் 16 கப்பல்களில் மிளகுகளை கொள்ளையடிக்க இந்தியா வருகிறான். அவன் நாட்டைக் கண்டுபிடிக்க வரவில்லை. இயற்கை வளங்களை கொள்ளையடித்துக் கொண்டு போக வந்தான் என்று நம்மவர்களுக்குப் படத்தின் மூலம் மனதில் பதிய வைக்க முயன்றிருக்கிறேன். அந்தக் காலத்தில் காலனிய ஆட்சி. இன்றைக்கு கார்ப்பரேட்டுகளின் ஆட்சி. இரண்டும் கொள்ளைதான். இந்த இடத்தில்தான் படத்தின் முடிச்சு வலுவாக வந்திருக்கிறது.

பிரபுதேவா, பிருத்விராஜ், ஆர்யா, ஜெனிலியா, தபு, வித்யாபாலன் என்று ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் இருக்கிறார்களே?

பிருத்விராஜ், பிரபுதேவாவிற்கு வலுவான கதாபாத்திரம். ஜெனிலியா முறையாக கற்று சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். வித்யாபாலன் தன் தாசி ஆட்டத்திற்காகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்.

வழக்கமாக, தமிழ் சினிமாவில் ஹீரோயின்களைப் பயன்படுத்துவதைப் போல யாரையும் ஒப்புக்குப் பயன்படுத்தவில்லை.



SOURCE: http://www.koodal.com/tamil/movies/interviews/634/tamil/santhosh-sivan-speaks-about-urumi-movie





No comments:

Post a Comment